டெல்லி :வடக்கு டெல்லியின் ரோகிணி பகுதியை டெல்லியைச் சேர்ந்த சஷம் ப்ருதி என்ற 24 வயது இளைஞர், இவர் ரோகிணி செக்டார் பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் டிரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
24 வயதான சஷம் ப்ருதி, பி.டெக் முடித்துவிட்டு குருகிராமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தினமும் வீட்டின் அருகில் இருக்கும் உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்ட இவர், சம்பவம் நடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) காலை 7.30 மணியளவிலும் ஜிம்முக்குச் சென்று, வழக்கம்போல் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக டிரெட் மில்லில் நடந்துள்ளார்.
இதையும் படிங்க :அனுமதியின்றி இயங்கிய ஸ்பா.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது விபச்சார தடுப்புப் பிரிவு வழக்கு!
அப்போது எதிர்பாராத விதமாக டிரெட்மில்லில் மின்சாரக்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி சஷம் ப்ருதி நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அங்குள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனையின் முடிவிலும், மின்சாரம் தாக்கியதால் தான் சஷம் ப்ருதி இறந்தாரென உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து உடற்பயிற்சி கூட மேலாளர் அனுபவ் துக்கலை போலீசார் கைது செய்தனர். அனுபவ் துக்கல் மீது கொலைக்குற்றம் மற்றும் இயந்திரங்கள் தொடர்பாக அலட்சியமாக நடந்து கொண்டது (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 287) மற்றும் 304A (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, இளம் வயதினர் பலர் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உயிரிழந்து வரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் உடற்பயிற்சி நிலையத்தில் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க :கட்டுமானத்துறையினரை குறி வைத்து பணம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி உள்பட ஏழு பேர் கைது!