கோழிக்கோடு : கேரளாவில் மாநில அரசுக்கும், ஆளுநர் ஆரிப் கானுக்கு ஏழாம் பொருத்தமாகவே காணப்படுகிறது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்து உள்ளதாகவும் அதில் 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளாகவும், 5 மசோதாக்கள் 1 ஆண்டாகவும் நிலுவையில் உள்ளன என்று கூறி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் அமைப்பான எஸ்.எப்.ஐ மற்றும் டி.ஒய்.எப்.ஐ அமைப்பு ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தி கல்லூரிகளில் போஸ்டர் ஒட்டினர். இந்த போஸ்டர்களை போலீசார் கிழித்து எறிந்த நிலையில் மீண்டும் அதே இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளன.
முதலமைச்சர் பினராயி விஜயனின் உத்தரவின் பேரில் மாநில காவல் துறையால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக ஆளுநர் ஆரிப் கான் குற்றம் சாட்டினார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கோழிக்கோடு பல்கலைக்கழக துணை வேந்தர் விளக்கம் அளிக்கக் கோரி ஆளுநர் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற ஆளுநர் ஆரிப் கானின் காரை வழிமறித்து மாணவ அமைப்பினர் முற்றுகையிட்டனர். அப்போது கோபம் அடைந்த ஆளுநர் ஆரிப் கான், காரில் இருந்து கீழே இறங்கி மாணவர்களிடையே ஆவேசமாக பேசினார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆரிப் கானின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் ராஜ் பவனுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.