அமெரிக்காம் சீனா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் மாறுபாடு பி.எப்.7 கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குஜராத் மற்றும் ஒடிசாவில் உருமாறிய ஒமைக்ரான் மாறுபாடு பி.எப்.7 கரோனா வைரஸ் 3 பேருக்கு கண்டறியப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் ஆஸ்திரேலியா, சீனாவில் இருந்து அண்மையில் குஜராத் வந்த பெண் உள்பட 2 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டு உள்ள நிலையில், பி.எப்.7 மாறுபாடு உள்ளதா அறிய இருவரின் மாதிரிகள் மரபணு திரிபு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அவசர ஆலோசனை
இதையடுத்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பொது வெளியில் மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் முககவசம் அணிவது மற்றும் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து மக்களுக்கு மாநில அரசுகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா சுகாதாரத்துறை செயலாலர் ராஜேஷ் பூஷன் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாட்டில் தயார் நிலை
நாட்டில் கரோனா நிலவரங்கள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி, உயிர் காக்கும் கருவிகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன், மருந்துப் பொருட்கள் உள்ளிட்வைகளை போதிய அளவில் கையிருப்பு வைக்ககுமாறும், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தேவைக் கேற்ப அதிகரிக்குமாறும் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டம் முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், பயணிகள் தேர்வை விமான நிறுவனங்களே மேற்கொள்ளலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் சிவில் விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாநில அமைச்சர்கள் கூட்டம்
இதனிடையே நாட்டின் கரோனா நிலவரங்கள் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவிய காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்களில் கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, தேவைக்கேற்ப கண்காணிப்பு பணிகளை மேற்கொளவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் சீனா, பிரேசில், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் உச்சம் தொட்டு வரும் நிலையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், பரவல் அதிகரித்தால் அதற்கேற்றவாறு மருத்துவ உபகரணங்களை தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவ்மறும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நாட்டு பயணிகளுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர் கட்டாயம்
இந்நிலையில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங் காங், தாய்லாந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் ஆர். டி. -பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சீனா உள்ளிட்ட நாடுகளில் பரவல் எண்ணிக்கை உச்சம் தொட்டு வருவதை அடுத்து அங்கிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 201 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், ஒட்டுமொத்தமாக 3 ஆயிரத்து 397 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
இதையும் படிங்க:Bharat Jodo Yatra: ராகுல் உடன் கை அசைத்த கனிமொழி எம்பி