ஷிம்லா: புதிதாக வாகனங்கள் வாங்கும்போது பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும் வகையில் நம்பர் பிளேட்டுகளை வாங்குவது வாடிக்கையாக மாறிவிட்டது. இதுபோன்ற கவர்ச்சியான எண்கள் விஐபி அல்லது விவிஐபி எண்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதுபோன்ற விஐபி எண்களை வாங்க கூடுதலாக பணம் செலுத்தவும் மக்கள் தயாராக இருக்கின்றனர்.
இந்த கலாசாரம் கார் வாங்குபவர்களிடையே அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இருசக்கர வாகனங்களை வாங்கும் மக்களும் இதை பின்பற்றுகின்றனர். அந்த வகையில் ஹிமாச்சலப்பிரதேசத்தில் ஒரு ஸ்கூட்டியின் விஐபி நம்பர் பிளேட் ஏலம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்காய் பகுதியில் HP 999999 என்ற விஐபி நம்பர் பிளேட் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. இதற்கு தொடக்கத்தில் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இந்த எண்ணை வாங்குவதற்கு அதே பகுதியைச் சேர்ந்த 26 பேர் ஆர்வம் காட்டினர். இதனால் இந்த விஐபி எண்ணுக்கான மதிப்பு ஒரு கோடி ரூபாயை கடந்துள்ளது. ஏலம் இதுவரை ஒரு கோடியே 11 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. இதற்கான ஏலம் நாளை(பிப்.17) மாலை நடைபெறவுள்ளது.
இந்த ஏலம் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது. யூடியூபர்கள் பலரும் இதனை ரோஸ்ட் செய்து வருகிறார்கள். அதற்கு காரணம், ஸ்கூட்டியின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய், அதற்கான நம்பர் பிளேட்டுக்கான ஏலம் ஒரு கோடியை தாண்டுகிறது. நம்பர் பிளேட்டுக்கு இவ்வளவு செலவு செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது? என்றும், இதுபோன்ற மோகங்கள் ஆபத்தானவை என்றும் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: செல்ஃபி எடுப்பதில் தகராறு: பிரித்வி ஷா நண்பரின் கார் மீது தாக்குதல்!