டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியைக் கிண்டல் செய்யும்விதமாகப் பேசிய ராகுல் காந்தி, மோடி ஆட்சிக் காலத்தில் ஐந்து லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கி மோசடிகள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டினார்.
இந்த மோசடி இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலத்தில் இல்லாத அளவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மோடியை ட்விட்டரில் விமர்சிக்கும்விதமாகப் பேசிய ராகுல் காந்தி, "மோடி தலைமையிலான அரசு இந்திய மக்களை ஏமாற்றியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மோசடி
தற்போதைய காலம் அவருக்கும், அவரது நண்பர்களுக்கு நன்றாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டார். முன்னதாக காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா குஜராத்தைச் சேர்ந்த கப்பல் கட்டுமான நிறுவனமான ஏபிஜி வங்கி மோசடி செய்ததாகப் பேசினார்.
இது குறித்து அவர், "நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி மோடி ஆட்சியின்கீழ் நடந்துள்ளது கவனிக்கப்பட வேண்டியது. கடந்த ஏழு ஆண்டுகளில் நிகழ்ந்த ஐந்து லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான வங்கி மோசடி நமது வங்கியின் கட்டமைப்பைச் சிதைத்துவிட்டன" எனக் குற்றம் சுமத்தினார்.
இதில் கப்பல் கட்டுமான நிறுவனமான ஏபிஜியின் உரிமையாளர் ரிஷி அகர்வால் உள்ளிட்டோர் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 28 வங்கிகளை ஏமாற்றியுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். வங்கி மோசடியாளர்களுக்காக மோடி அரசு, கொள்ளையடித்துத் தப்பிச் செல்வதற்கான திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது எனவும் சுர்ஜேவாலா கடுமையான புகாரை முன்வைத்தார்.
ஆட்சியாளர்களுடன் தொடர்பில் மோசடியாளர்கள்?
மோசடி பட்டியலில் உள்ள நிரவ் மோடி, சோட்டா மோடி, மெஹுல் சோக்சி, அமி மோடி, நீஷால் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா, ஜட்டின் மேத்தா, செட்டன் சந்தேசரா, நிதின் சந்தேசரா உள்ளிட்ட பலர் தற்போதைய ஆளும் தரப்புடன் மிக நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் எனவும் அவர் பட்டியலிட்டார்.
இதையும் படிங்க:'பிரதமருக்கே பாதுகாப்பில் இப்படி; அப்புறம் எப்படி பஞ்சாபுக்கு மிஸ்டர் சன்னி?'