டெல்லி: சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 22) 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் வி.கே.சக்சேனாவின் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது. இதைத் தொடர்ந்து நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் 78 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மாசுவை குறைக்க ரூ.21,000 கோடி: அமைச்சர் கைலாஷ் கெலாட் தனது பட்ஜெட் உரையில், "டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தி பசுமை மாநிலமாக மாற்ற ரூ.21,000 கோடி ஒதுக்கப்படுகிறது. மாநகராட்சிகளுடன் இணைந்து டெல்லியை தூய்மையாகவும், காற்று மாசு இல்லாத நகரமாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளை தூய்மைப்படுத்த நவீன இயந்திரங்கள் வாங்கப்படும். டெல்லி மாநகரம் முழுவதும் 52 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். ஒவ்வொரு மரமும் காற்று மாசுவில் இருந்து நம்மை பாதுகாக்கும். வரும் டிசம்பர் மாதம் ஓக்லாவில் செயல்பட்டு வரும் குப்பைக்கிடங்கு அகற்றப்படும். 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பால்ஸ்வா, 2024 டிசம்பர் காஜிபூர் ஆகிய இடங்களில் உள்ள குப்பைக்கிடங்குகள் அகற்றப்படும்.
புதிதாக 100 மொஹல்லா கிளீனிக்குகள்:அரசுப்பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணம் 2023-24ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுகிறது. நோயுற்ற ஏழைப் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், மேலும் 100 மொஹல்லா கிளீனிக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டுமொத்தமாக சுகாதாரத்துறைக்கு ரூ.9,742 கோடி ஒதுக்கப்படுகிறது.