இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி, ஒட்டு மொத்த திரை உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் தான், ஆர்.ஆர்.ஆர்.. இந்தப் படம் கடந்தாண்டு மார்ச் 25-ல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் ஐந்து மொழியில் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி சாதனைப் படமாகவும் திகழ்கிறது. மேலும், இந்தத் திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும், தங்களது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். குறிப்பாக, அனைவரது மனதிலும் வெறுப்பை ஏற்படுத்தும் வண்ணம் திறமையான நடிப்பை வெளிப்படுத்திய ரே ஸ்டீவன்சன் நடிப்பு பாராட்டுக்கு உரியது.
இவர் இந்தப் படத்தில் ‘சர் ஸ்காட்’ என்ற ஆங்கிலேயர் வேடத்தில், எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ரே ஸ்டீவன்சன் (வயது 58) மே 21-ஆம் தேதி எதிர்பாராத விதமாக இத்தாலியில் காலமானார். ரே ஸ்டீவன்சன் மே 25, 1964-ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்தில் உள்ள லிஸ்பனில் பிறந்தார். இவர் தனது 8 வயதில் இங்கிலாந்துக்குச் சென்று பிரிஸ்டல் ஓல்ட் விக் தியேட்டர் பள்ளியில் சேர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இவர் தனது 29ஆவது வயதில் பட்டம் பெற்று பின்னர், தனக்கு விருப்பமான துறையான சினிமாவைத் தேர்ந்தெடுத்துள்ளார். 90-களில் திரைத்துறையில் சிறிய வேடங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்த இவர், 1998-ல் நடித்த ‘தி தியரி ஆஃப் பிளைட்’ படத்தின் மூலம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்தார். மேலும், இந்தப் படம் இவரது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது என்றே கூறலாம்.