திருத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர் தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். அதன் நீட்சியாக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கெரியில் ஞாயிற்றுக்கிழமை (அக். 3) போராட்டம் நடத்தினர். அப்போது துணை முதலமைச்சர் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுடன் சென்ற பாஜகவினர் உழவர் மீது காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனால், கோபமுற்ற உழவர் இரண்டு சொகுசு கார்களைத் தீயிட்டு கொளுத்தினர். இந்த வன்முறைச் சம்பவத்தில் சிக்கி நான்கு உழவர் உள்பட எட்டு பேர் வரை உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்ட உழவரைச் சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு, சீதாப்பூரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு
வீட்டுக் காவலில் இருக்கும் பிரியங்கா காந்தி உழவர் மீது கார் ஏற்றும் காணொலியை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்ய்ப்பட்டார்.
இந்நிலையில், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "இந்திய தண்டனைச் சட்டம் (இதச) பிரிவு 151இன்கீழ் பிரியங்கா கைதுசெய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. நேற்று பிரியங்காவுடன் தொடர்புகொண்டு பேசினேன்.