ராஞ்சி (ஜார்கண்ட்): ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரான லாலு பிரசாத் யாதவ் 1990 முதல் 1997 ஆம் ஆண்டு வரை இருமுறை பீகார் மாநில முதலமைச்சராக இருந்தார். இவர் முதலமைச்சராக இருந்தபோது போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்குத் தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலங்களில் இருந்து 950 கோடி ரூபாய் பணம் எடுத்து ஊழல் செய்ததாக இவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன.
ஏற்கனவே நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்ட லாலு பிரசாத், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நான்கு வழக்குகளிலும் பிணை பெற்றார். இந்த நிலையில் ஐந்தாவது மாட்டுத் தீவன ஊழலான, டொராண்டா கருவூலத்திலிருந்து ரூ.139 கோடி அரசுப் பணம் எடுத்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவருக்கு கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.60 லட்சம் அபராதம் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.