பீகார்:டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று(மே.28) திறக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதேபோல், திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய தமிழ்நாட்டின் செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே நிறுவினார். இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால், காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பது நாட்டிற்கு அவமானம் என்றும், ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் புகைப்படம் மற்றும் சவப்பெட்டியை ஒப்பிட்டு புகைப்படம் ஒன்றை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த ட்வீட்டில் புகைப்படத்தை குறிப்பிட்டு "இது என்ன?" என்றும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பதிவை அக்கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்துள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சக்தி சிங் யாதவ், தங்கள் ட்விட்டர் பதிவில் உள்ள புகைப்படம் நாட்டில் ஜனநாயகம் புதைக்கப்பட்டிருப்பதை பிரதிபலிக்கிறது என்றும், இதனை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில் என்றும், அது மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் இடமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டதற்காக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக எம்பியும், பீகார் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவருமான சுஷில் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர்.. சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டின் 'செங்கோல்'