டெல்லி: இந்தியா தலைமை தாங்கும் ஜி20 மாநாடு, டெல்லியில் நாளை (செப் 9) மற்றும் நாளை மறுநாள் (செப் 10) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பும், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகத் தலைவர்கள் தொடர்ந்து இந்தியா வந்து கொண்டு இருக்கின்றனர்.
அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்தடைந்தார். அப்போது அவரை டெல்லி விமான நிலையத்தில் வைத்து ஓய்வு பெற்ற சிவில் விமானப்போக்குவரத்து ஜெனரல் விகே சிங் வரவேற்றார். அதேபோல், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தி உடன் இன்று (செப் 8) டெல்லி வந்தடைந்தார்.
இவ்வாறு டெல்லி வந்தடைந்த ரிஷி சுனக்கை, மத்திய அமைச்சர் அஷ்வினி சவுபே, இந்தியாவிற்கான இங்கிலாந்து உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் மற்றும் மூத்த பிரமுகர்கள் டெல்லி விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர். அப்போது, பாரம்பரிய நடனங்கள் நிகழ்த்தப்பட்டது.
மேலும், இந்த மூன்று நாள் இந்திய பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி உடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். முன்னதாக, ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ரிஷி சுனக், தற்போதைய நிலையைக் காட்டிலும், எதிர்காலத்தில் இங்கிலாந்து - இந்தியா உறவானது வலுப்பெறும் என தெரிவித்து இருந்தார்.