மாற்று மதத்தவரை திருமணம் செய்த ஆணுக்கு எதிராக, தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக பெண்ணின் தந்தை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னுடைய மகளை அந்த ஆண் கட்டாய திருமணம் செய்துகொண்டதாக பெண்ணின் தந்தை புகார் அளித்திருந்தார்.
காதலுக்கு இனி மதம் தடையில்லை...
இதனைத் தொடர்ந்து, திருமணம் செய்துகொண்ட ஆணுக்கு எதிராக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். முன்னதாக, குழந்தைகள் நல ஆணையத்திற்கும் பின்னர், பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக பெற்றோருடனும் அப்பெண் அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட தம்பதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, தங்களின் விருப்பப்படி பெண்கள் வாழலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, விருப்பத்திற்கு எதிராக பெற்றோருடன் அனுப்பிவைத்தது தவறு என நீதிமன்றம் தெரிவித்தது.
பங்கஜ் நக்வி, விவேக் அகர்வால் ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆணுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்து, தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது.