புதுச்சேரியின் அரசியல் நிலைகுறித்து விவாதிப்பதற்கு மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா, இந்த ஆட்சியில் மோசமான அரசியல் ஜனநாயகம் உள்ளது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப்போல், இந்த ஆட்சியில் முதலமைச்சர் நியமனத்தில் ஆரம்பித்து அமைச்சர், சபாநாயகர், ராஜ்யசபா உறுப்பினர் நியமிக்கப்படுவது வரை ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது.
ரவுடிக்கும்பல் போரட்டத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்துகிறது. ஆட்சி, அதிகாரிகள் துணையோடு வில்லியனூர், முத்தியால்பேட்டை நடந்த பொதுக்கூட்டத்திலும் ரவுடிக்கும்பல் தகராறு செய்தது. புதுச்சேரியில் பந்த் அறிவித்திருக்கிறார்கள். அந்த பந்த்தில் 10 பேர் தான் இருப்பார்கள். இது எங்கிருந்து யாரால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை புதுச்சேரி மக்கள் நன்கு அறிவர். சபாநாயகர் வேலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒன்று உள்ளது. எந்த கட்சி சார்பில் ஆளுநராக நியமிக்கப்பட்டாலும் அவர்கள் இலைமறை காயாக அந்த கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனால், பாஜக அலுவலகமாக ராஜ்நிவாஸை தமிழிசை மாற்றியுள்ளார்.