மே 31ஆம் தேதி, தெலுங்கு மொழியைச் சேர்ந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தன. மாநில அரசின் செயல்பாடு குறித்து விமர்சனப் பார்வையில் சில கருத்துகளைப் பதிந்ததாகக்கூறி, இந்த இரண்டு செய்தி நிறுவனங்கள் மீது ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும்விதமாக, இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மாநில அரசோ, தேச துரோகம் வழக்கிற்கான தெளிவான முகாந்திரம் இருப்பதாகக் கூறியது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேச துரோகம் என்பது என்ன என்பதை வரையறை செய்வதற்கான காலம் வந்துவிட்டதாகக் கருத்து கூறியது.
தேச துரோகம் என்றால் என்ன? கடந்த 1962ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கேதர் நாத் சிங் Vs பிகார் மாநில அரசு வழக்கில், இதற்குரிய வரையறை தந்துள்ளது.
1995ஆம் ஆண்டு பல்வந்த் சிங், பஞ்சாப் மாநில அரசு வழக்கிலும், இன்றைய வினோத் துவா இமாசல் பிரதேச மாநில அரசு வழக்கிலும், இந்த வரையறை முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளன. இந்தத் தேச துரோகச் சட்டம் எத்தனை முறை விளக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது?
உச்ச நீதிமன்றம் சார்பில் அளிக்கப்பட்ட உத்தரவு என்பது இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் என, இந்திய அரசியல் சாசனத்தின் 141ஆவது சட்டப்பிரிவில் தெளியாகக் கூறப்பட்டுள்ளது.
ஒரு சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்த பின்னர், அது ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள், சிவில் அலுவலர்கள், காவல் துறை, நீதிமன்றம் என, அனைத்து அமைப்பிற்கும் பொருந்தும்.
ஒவ்வொரு வழக்கிற்கும் புதிய விளக்கம் என்பது தேவையில்லை. அது நடைமுறையில் தேவையற்ற இழுவையை உருவாக்கிவிடும். அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டத்தை முறையாகப் பின்பற்றாமல் இருப்பதே இதில் பிரச்சினையை உருவாக்குகிறது.
கேதர் நாத் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, "ஒரு குடிமகனுக்கு அரசு பற்றி அவருக்குத் தோன்றும் எண்ணங்களை கருத்தாகவோ, விமர்சனமாகவோ சொல்வதற்கும், எழுதுவதற்கும் உரிமை உள்ளது; அந்தக் கருத்து மக்களை அரசுக்கு எதிராக வன்முறையின் பாதையில் தூண்டிவிடாமலும், பொது அமைதிக்குச் சீர்குலைவு ஏற்படுத்தும் நோக்கம் இல்லாமலும், இருக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
அந்த நபர் பேசிய, எழுதிய சொற்கள் தீங்கு விளைவிக்கும் நோக்குடனோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடனோ, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்குடனோ இருக்கும்பட்சத்தில், அதைத் தடுக்கலாம் எனத் தீர்ப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேச துரோகச் சட்டம் என்பது இதுபோன்ற தவறான நோக்குடன் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை எற்படுத்தும் விவகாரங்களுக்கே பொருந்தும் எனத் தெளிவாகவும், நேரடியாகவும் உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது.
இந்தச் சட்டத்தை ஊடகவியலாளர், செய்தி நிறுவனத்துக்கு, உதாரணத்திற்காகப் பொருத்திப் பார்ப்போம். அரசின் ஒரு குறிப்பிட்ட முடிவு அல்லது கொள்கையை மறுத்தோ அல்லது விமர்சித்தோ ஒரு செய்தி வெளியிடப்படுகிறது.
தேச துரோகம் என்ற வரையறைக்கு இது பொருந்தும். இருப்பினும் இந்தச் செய்திக்கு எதிராகக் காவல் துறையில் தேச துரோகக் குற்றச்சாட்டில் புகாரளிக்கப்படுகிறது.
காவல் அலுவலருக்கு தேச துரோகச் சட்டப்பிரிவு என்றால் என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும் என்பதுதானே அடிப்படை. இது மாற்று கருத்துதானே தவிர தேச துரோகம் அல்ல என்பதை அவர் வழக்குத் தொடர்ந்தவரிடம் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், காவல் அலுவலர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, குற்றச்சாட்டை ஏற்று, அதன் மீது நடவடிக்கை எடுக்கிறார். இந்தச் சூழலில் காவல் அலுவலரின் தவறான நடவடிக்கையைத் தடுக்கும் பொறுப்பு யாருடையது?