இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது பத்தாண்டு திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதில் கனரக லிப்ட் ராக்கெட், மீண்டும் பயன்படுத்தக்கூடிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம், அரை கிரையோஜெனிக் இயந்திரம் மற்றும் பல தொழில்நுட்பம் சார்ந்தவை உள்ளடங்கியுள்ளன.
அதனடிப்படையில், ககன்யான் திட்டத்தின் கீழ் ஆளில்லா முதல் விமானம் என்பது இந்தாண்டு நாம் அடைய வேண்டிய மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரோவின் அனைத்து மையங்களும், பத்தாண்டுத் திட்டத்தை வகுப்பதில் தீவிரமாக பங்களித்துள்ளதாகவும் தனது புத்தாண்டு செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த பத்தாண்டுகளில் பிராட்பேண்ட் தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோள், மின்சார செயற்கைக்கோள் தளம் மற்றும் அனைத்து பயன்பாட்டு பகுதிகளிலும், உயர் செயல் திறன் கொண்ட செயற்கைக்கோள் தளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் சிவன் கூறியுள்ளார்.