பெங்களூர்: ராமநகர், பிடாடி அருகே உள்ள ஈகிள்டன் ரிசார்டில் உள்ள ஆடம்பரமான வில்லாவில் நேற்று முன்தினம் பிப்.7 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற விமானி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த ரகுராஜன் (வயது 70) இவர் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மனைவி ஆஷா (வயது 62), ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக இந்த வில்லாவில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து ராமநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்பாபு கூறுகையில், "இவர்களது மகன்கள் டெல்லியில் தங்கி தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். காலையில் இருந்து தங்கள் பெற்றோருக்குப் பலமுறை அழைப்பு விடுத்தும் மதியம் வரை பதிலளிக்கப்படாததால், ஏதோ தவறு இருப்பதாக அவர்கள் சந்தேகித்தனர்.
இதனையடுத்து, அவர்களது மகன்களில் ஒருவர் ரிசார்ட்டின் பாதுகாவலர்களிடம் தங்கள் வில்லாவிற்குச் சென்று, என்ன நடந்தது என்பதைச் சரி பார்க்கும்படி தெரிவித்தார். இரண்டு பாதுகாவலர்கள் அங்கு சென்று, அவர் வீட்டு காவலாளியான ஜோகிந்தர் சிங்கை சந்தித்தனர்.
ரகுராஜனும் அவரது மனைவியும் அதிகாலையில் வெளியே சென்றுவிட்டதாகக் காவலர்களிடம் சிங் கூறினார். இதையடுத்து பாதுகாவலர்கள் மகன்களில் ஒருவருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் சிங்கின் பதிலை நம்பவில்லை மற்றும் பாதுகாவலர்களை வில்லாவின் உள்ளே சென்று பார்க்கச் சொன்னார்.