மும்பை (மகாராஷ்டிரா):மத்திய பாஜக அரசிற்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கினர். இக்கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று (ஆகஸ்ட் 31) தொடங்கி இன்று (செப்.1) வரை நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் 28 கட்சிகளின் 63 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி செய்துள்ளது. இக்கூட்டணியின் முதலாவது கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் நடைபெற்ற நிலையில், இதற்கான பொறுப்புகளை பிகார் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் மேற்கொண்டு நடத்தினர். தற்போது I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நேற்று (ஆக.31) மற்றும் இன்று (செப்.1) நடைபெற்று வருகிறது.
I.N.D.I.A கூட்டணியின் சார்பாக இன்று நடைபெற்று வரும் மும்பை கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழுவை உருவாக்க முடிவு செய்யப்பட்டு,13 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. I.N.D.I.A கூட்டணியின் சார்பாக அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழுவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பிகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரன், சிவசேனா (உதவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத், ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சதா, சிபிஐ தலைவர் டி ராஜா, தேசிய மாநாட்டுத் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, PDP தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க:One Nation, One Election: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' - ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு அமைப்பு!