வாஷிங்டன்:ஜென்டாமைசின் (Gentamicin) என்பதுகடுமையான உடல்நலக்குறைவை சந்திக்கும பச்சிளம் சிசுக்களுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக் ஆகும். நீரில் கரையக்கூடிய தன்மை கொண்ட இந்த மருந்து சிறுநீர் வழியே உடலிலிருந்து வெளியேறிவிடும். இதன் காரணமாக ஜென்டாமைசின் டோசோஜை கணக்கிட உடலின் நீர் எடை உட்பட மொத்த எடையையும் கணக்கிடுவது அவசியமாகும். அதே நேரத்தில் ஆரோக்கியமான குழந்தைக்கும், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கும் உடலின் நீர் அளவில் பெரிய அளவில் வேறுபாடு இருப்பது இயல்புதான்.
இதன் காரணமாக வெறுமனே உடல் எடையை மட்டும் கணக்கிட்டு ஆன்டிபயாடிக் மருந்துகளை வழங்குவது சரியான பரிந்துரை ஆகாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இயல்பாகவே பலவீனமான சிறுநீரகத்தை கொண்டுள்ளனர். இதனால் டோசேஜில் ஏற்படும் வேறுபாடு, சிறுநீரக செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும் என்பதால், துல்லியமாக மருந்தின் அளவை கணக்கிடுவது முக்கியம். இது தொடர்பான ஆய்வறிக்கையை அமெரிக்க ஆய்வாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர் (Pediatric Investigation on June 8, 2023).
பச்சிளம் சிசுக்களின் உடலின் கொழுப்புடன் கூடிய (FAT) நிறை (Mass) மற்றும் கொழுப்பற்ற (Fat free) நிறை ஆகியவற்றை கணக்கிடுவது, உடலின் தன்மையைப் பற்றி பல்வேறு நிலைகளில் புரிந்து கொள்ள உதவும். பஹரைன் நாட்டில் உள்ள அரேபியன் கல்ஃப் பல்கலைக் கழகத்தில் கண்ணன் ஸ்ரீதரன் தலைமையிலான ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், கொழுப்பற்ற (Fat free) எடையை கணக்கிடுவதே, ஜென்டாமைசின் ஆன்டிபயாடிக் அளவை துல்லியமாக கணக்கிட சரியான வழிமுறை என தெரியவந்துள்ளது.
உடலின் கொழுப்பற்ற எடையை கணக்கிட சிசுக்களின் கையில் உள்ள மடிப்புகளின் அளவைக் கொண்டு கணக்கிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய அதிகபட்ச, குறைந்த மற்றும் மிதமான ஆன்டிபயாடிக்கின் அளவை கணக்கிட்டுள்ளனர்.
ஆய்வின் முடிவில் சாதாரண குழந்தைகளைக் காட்டிலும் குறைமாத குழந்தைகளின் ரத்தத்தில் ஜென்டாமைசின் செறிவு (concentration) அதிகமாக இருந்ததை கண்டறிந்துள்ளனர். குறைவான எடையுடன் பிறந்த குழந்தைகளிலும் ரத்தத்தில் ஆன்டிபயாடிக் செறிவு அதிகரித்து காணப்படுகிறது. ஆனாலும் இதனை ஈடுகட்டும் விதமாக குறைமாத குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்தின் அளவு 21 சதவீதம் அதிகமாக உள்ளது. இதுதான் ஆன்டிபயாடிக்கின் அளவை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
தற்போதைய நிலையின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜென்டாமைசின் டோசேஜின் அளவாக 4 முதல் 5 மில்லிகிராம்/ கிலோகிராம் என்ற அளவில் உள்ளது. ஆனால் இதனை குறைமாத குழந்தைகளில் 48 மணி நேரத்திற்கு 7.95 மி.கி., 36 முதல் 48 மணி நேரத்திற்கு 7.30 மி.கி. கொடுக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஒரு சிலவாரங்கள் மட்டும் குறைபிரசவமாக இருக்கும் குழந்தைகளுக்கு 5.90 மி.கி. என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான குழந்தைகளில் 24 மணி நேரத்திற்கு 5.1 மில்லிகிராம்/கி.கி சரியான அளவு என ஆய்வாளர்கள் வரையறுத்துள்ளனர்.
பச்சிளம் குழந்தைகளில் ஜென்டாமைசின் தேவையை நிர்ணயம் செய்வதில் கொழுப்பற்ற உடல் எடையை கணக்கிடுவது துல்லியமான முடிவுகளை தரும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வருங்காலத்தில் இதே கணக்கீடு மற்ற மக்களுக்கும் அளவீடாக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறும் மருத்துவர் ஸ்ரீதரன் இதில் மேலும் அதிக ஆராய்ச்சிகளுக்கான வழியை, திறந்துவிட்டுள்ளதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்.