இட்டாநகர் : அருணாச்சல பிரதேசத்தில் மீயோஜின் அருணாசலென்சிஸ் (Meiogyne Arunachalensis) என்ற புதிய வகை மரம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அருணாச்சல பிரதேசத்தின் இந்த புதிய மர இனம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து ‘எடின்பர்க் ஜர்னல் ஆஃப் பாட்னி’யின் மே 19 பதிப்பில் வெளியிடப்பட்டு உள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் புதிய இன மரம் கண்டறியப்பட்டது குறித்து அம்மாநில முதலமைச்சர் அவரது ட்விட்டர் பக்கத்தில், “அருணாச்சல பிரதேசத்தில் மீயோஜின் அருணாசலன்சிஸ் என்ற புதிய வகை மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! ஆராய்ச்சியாளர்கள் இதை இந்தியாவில் இருந்து மூன்றாவது இனமாகவும், கிழக்கு இமயமலை மற்றும் வடகிழக்கு இந்தியா பகுதியில் இருந்து கண்டறியப்பட்ட முதல் இனம் என தெரிவித்தனர்” என பதிவிட்டுள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தின் ஆதி மலை பகுதிகளில் பல்லுயிர் பெருக்கம் குறித்த ஆராய்ச்சியின் போது ஆராய்ச்சியாளர்கள் இந்த மீயோஜின் அருணாசலென்சிஸ் மரத்தை கண்டறிந்ததாக இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீயோஜின் அருணாசலென்சிஸ் மரத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்விற்கு ஹேம் சந்த் மஹிந்திரா அறக்கட்டளை, இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் அருணாச்சல பிரதேச வனத்துறை ஆகியவை ஆதரவு அளித்தன.
இதையும் படிங்க: மன்னார்குடியில் சிங்கப்பூரின் தந்தை 'லீ குவான் யூ' நினைவுச் சின்னம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
ஆதி மலை பகுதிகளில் பல்லுயிர் பெருக்கம் குறித்த ஆராய்ச்சி குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஆராய்ச்சியாளர் நவேந்து பேஜ் இது குறித்து தெரிவிக்கையில், “இது இந்தியாவில் இருந்து கண்டறியப்பட்ட இனங்களில் இது மூன்றாவது மற்றும் கிழக்கு இமயமலை மற்றும் வடகிழக்கு இந்தியாவிலிருந்து கண்டறியப்பட்ட முதல் இனம்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மீயோஜின் அருணாசலென்சிஸ் இனமானது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவிக் கிடக்கும் சுமார் 33 விவரிக்கப்பட்ட உயிரியல் வகைப்பாடுகளை உள்ளடக்கியது" என்றும் தெரிவித்துள்லார். மேலும் தெரிவிக்கையில் , “இந்த இனங்கள் தாய்லாந்தில் உள்ள மீயோஜின் மாக்ஸிஃப்ளோரா என்ற இனத்துடன் உருவ ஒற்றுமையைக் கொண்டு உள்ளன. ஆனால் இது தாவர மற்றும் இனப்பெருக்க பண்புகளில் இருந்து வேறுபடுகிறது” என்று ஆய்வு குழுவில் ஒருவரான நவேந்து பேஜ் அவரது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
மீயோஜின் மாக்ஸிஃப்ளோரா உடன் ஒப்பிடும் போது மீயோஜின் அருணாசலென்சிஸ் மரம் அதன் உயரம் மற்றும் மரத்தடியின் சுற்றளவு ஆகியவற்றின் அடிப்படையில் மிகப்பெரிய இனமாகும். அருணாச்சல பிரதேசத்தில் மர இனங்களின் கண்டுபிடிப்பு வடகிழக்கு இந்தியா மற்றும் கிழக்கு இமயமலை பல்லுயிர் பெருக்கத்தின் இனத்தின் முதல் பதிவாகும்.
இந்த மீயோஜின் அருணாசலென்சிஸ் இன மரம் அருணாச்சல பிரதேசத்தின் இடைப்பட்ட மாவட்டங்களான லோயர் திபாங் பள்ளத்தாக்கு மற்றும் லோஹித் பகுதிகளிலும், மியான்மரின் வடக்குப் பகுதிகளிலும், நம்தாபா தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள பகுதிகளிலும் காணப்பட வாய்ப்புள்ளது என்று அந்த இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி - டெல்லி திரும்பிய பிரதமர் மோடி பேச்சு