உத்தரகாசி:உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் முதல் வீடியோவை மீட்புக் குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினர் பெரும் நிம்மதியடைந்தனர். இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரகாண்ட்டின் உத்தரகாசி மாவட்ட பகுதியில் கட்டுமானப் பணியின் கீழ் உள்ள சுரங்கப்பாதையில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கப்பாதையின் சில பகுதிகள் இடிந்து விழுந்தது.
இதில் 41 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், தொழிலாளர்களின் நிலையை தெரிந்து கொள்ள கடந்த திங்கள்கிழமை டெல்லியில் இருந்து வரவைக்கப்பட்ட எண்டோஸ்கோபிக் கேமராவை 6 அங்குல குழாய் வழியாக அனுப்பி காட்சிகள் எடுக்கப்பட்டன.
அந்த வீடியோ காட்சிகளை தற்போது மீட்புக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். வீடியோவில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்திருந்த தொழிலாளர்கள், குழாய் மூலம் தங்களுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும் பதிவாகியுள்ளது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.