டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்குக் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (நவ.12) காலை 9 மணியளவில் சுரங்கத்தின் சுவர்கள் சரிந்து விழுந்தன. உள்ளே சுமார் 40 தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது அவர்களை மீட்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிநவீன துளையிடும் இயந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாக குழாய்கள் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், மீட்புப் பணிகளை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கண்காணித்து வருகிறார்.
தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நான்கரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதில் 35 மீட்டர் நீளத்திற்கு சுரங்கத்தின் சுவர்களில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், டேராடூனில் புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் விபுல் காண்ட்வால், "இருண்ட சுரங்கப் பாதைக்குள் அவர்கள் காயமடைந்திருக்கக் கூடாது என்பதுதான் பெரிய கவலை. ஏனென்றால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் காயங்களோடு உயிர் பிழைக்கப் போராடுவது மிகவும் கடினம். அதுமட்டும் இல்லாது, உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் காயத்தின் அளவை மதிப்பிடுவது சாத்தியம் இல்லாத ஒன்று" என்று கூறியுள்ளார்.
மேலும், “உள்ளே சிக்கியுள்ளவர்களுக்கு ஆக்ஸிஜன், தண்ணீர் மற்றும் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில், தொழிலாளர்கள் வெளியே வந்த பின்னரே தொழிலாளர்களின் நிலை தெரிய வரும். பல நேரங்களில் வெளிப்புற காயங்களை விட, உட்புற காயங்கள் மிகவும் ஆபத்தானவை. எனவே, சுரங்கப்பாதையில் உள்ள இடிபாடுகளை போர்க்கால அடிப்படையில் அகற்றுவது அவசியம்" என்று தொழிலாளர்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் வெளியேற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளார்.
இந்த நிலையில், தொழிலாளர்கள் மீட்கப்பட்டவுடன் அவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனை அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றுடன் மருத்துவர்கள் குழு தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:“தெலங்கானாவில் 9 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை” - காங்கிரஸ் வேட்பாளர் முகமது அசாருதீன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி!