ஆந்திர மாநிலத்தின் திறன் மேம்பாடு கழகத்தில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடந்ததாகக் கூறப்பட்டு தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திர பாபு நாயுடு கடந்த செப்டம்பர் மாதம் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தற்போது ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த சிறையில் இருந்த ஒரு சிறைவாசி டெங்குவால் உயிரிழந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கும் நோய் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவரது மகன் புகார் ஒன்றை எழுப்பியுள்ளார். ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை குறித்து, அரசு மருத்துவர்களின் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு வட்டாரங்களில் சார்பில், சந்திரபாபு குறித்து வெளிவரும் தகவல்கள் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்களின் அறிக்கைக்கு மாறுபட்டு இருப்பதால், சந்திரபாபுவின் குடும்பத்தார்கள், கட்சிக்காரர்கள் மற்றும் அவரின் தனி மருத்துவர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
சந்திரபாபுவை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், குளிர்ச்சியான காலநிலையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்து, ஐந்து வகையான மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருந்த நிலையில், சந்திர பாபு நாயுடுவின் உடல்நிலை குறித்து ஆய்வு மேற்கொண்ட இரண்டு அரசு மருத்துவர்களின் அறிக்கை வெளிவந்துள்ளது.
அவரது மார்பு பகுதிகள், கழுத்துப் பகுதி, கன்னங்கள், முதுகுப் பகுதிகள் மற்றும் உடலின் மற்ற சிலப்பகுதிகளில் அவருக்கு படைநோய் மற்றும் தோல் ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவை பரிசோதிக்க, இந்த மாதம் அக்.14ஆம் தேதி மாலை 4:30 மணியளவில், ஜிஜிஹெச் தலைமை கண்காணிப்பாளரிடம் இருந்து உத்தரவு வந்ததாக உதவிப் பேராசிரியர்கள் ஜி.சூர்யநாராயணா மற்றும் வி.சுனிதா தேவி ஆகியோர் ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.