கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கிராமப்புற பஞ்சாயத்து தேர்தலில் முறைகேடு நடந்ததாக அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் திங்கட்கிழமை மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஜூலை 8ஆம் தேதி கிராமப் புற பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 73 ஆயிரத்து 887 உள்ளாட்சி இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் வேட்பாளர்கள் களமிறங்கினர்.
மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சியினரிடையே கடும் மோதல் போக்கு இருந்தது. ஜூலை 8ஆம் தேதி காலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கூச்பெஹர், மால்டா, முர்ஷிதாபாத், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், நாடியா உள்ளிட்ட மாவட்டங்களில் கலவரம் நடந்தது.
இந்த கலவரத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட உள்ளிட கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சில இடங்களில் வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டன, வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதனை மறுத்த திரிணாமுல் காங்கிரஸ், பாதுகாப்புக்கு மத்திய படைகள் வேண்டுமென எதிர்கட்சிகள் தான் கோரியதாகவும், ஆனால் வன்முறை சம்பவங்கள் நடக்கும் போது மத்தியப் படைகளை காணவில்லை என்றும் தெரிவித்தது. மத்தியப் படைகள் சரியான இடங்களில் நிறுத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியது.