நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இதன் பெயரை ”சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழகம்” என மாற்றக் கோரி தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி கோரிக்கை விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குப் பெயர் போன அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரதத்தின் கருத்தாக்கத்திற்கு துணை நின்றவர் சுவாமி விவேகானந்தர். அவரின் கொள்கை மூலமாகவும் விழுமியங்கள் மூலமாகவும் பாரதத்தின் வலிமை பறைசாற்றப்படுகிறது.
எனவே, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெயரை சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழகம் என மாற்றவதே சரி. எதிர்காலத் தலைமுறையினருக்கு நம் நாட்டின் நாட்டுப்பற்றுமிக்கத் துறவியான விவேகானந்தரின் வாழ்கை உத்வேகம் அளிக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.
நான்கு நாள்களுக்கு முன்புதான், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் விவேகானந்தரின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கொள்கை ரீதியாக மாறுபட்டிருந்தாலும் தேசப்பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்காதவாறு அது இருக்க வேண்டும் என மோடி தெரிவித்திருந்தார்.
விவேகானந்தர் சிலை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் எனவும் அவர் காண விரும்பிய துணிவு, இரக்க குணம் ஆகியவை இதன்மூலம் மக்களிடம் தூண்டப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இடதுசாரி மாணவர் அமைப்பின் கோட்டையாகக் கருதப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பாஜக மாணவர் அமைப்புக்கு பெரும் சவாலாக உள்ளது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி ஆகியோர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் ஆவர்.
தேச விரோத சக்திகளுக்கு இடதுசாரி மாணவர் அமைப்பு ஆதரவாக இருப்பதாக பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்திவருவது குறிப்பிடத்தக்கது.