டெல்லி :ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் 6 மாதம் இலவச ரேசன் பொருட்களும் வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஒடிசா மாநிலம் பால்சோரில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு 7 மணியில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட கோர விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் 700க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இண்டர்லாக்கிங் மற்றும் சிக்னலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 124 பேரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என ரயில்வே அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர். இதுவரை 151 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக தெரிவித்த மாவட்ட நிர்வாகம் மீதமுள்ளவர்களை அடையாளம் காண டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்து உள்ளது.
இந்த ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தாராள மனம் கொண்டு உதவி வருகின்றனர். அதானி குழுமம் ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்கான செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. இந்நிலையில், ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அதானி நிறுவனமும் முன்வந்து உள்ளது.
ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள், மற்றும் வேலைவாப்பு வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "ஜியோ-BP நெட்வொர்க் மூலம் பேரிடர் பணிகளில் ஈடுபட்டு உள்ள ஆம்புலன்ஸ்களுக்கு எரிபொருள் இலவசமாக வழங்கும், மேலும் காயமடைந்தவர்களுக்கு இலவச மருந்துகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான மாவு, சர்க்கரை, பருப்பு, அரிசி, உப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட இலவச ரேஷன் பொருட்கள் ரிலையன்ஸ் ஸ்டோர்கள் மூலம் வழங்கப்படும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட கவுன்சிலிங் மட்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :Odisha Train Accident : 124 பேரை அடையாளம் காணுவதில் சிரமம்! டிஎன்ஏ பரிசோதனை நடத்த திட்டம்!