கோழிக்கோடு: கேரளாவில் நிபா வைரஸ் தொடர்பாக புதிய பாதிப்புகள் இல்லாத நிலையில் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி காயச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்களது மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிபா வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்தது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் உச்சகட்ட அவசரநிலை சூழல் உருவானது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என பலர் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டனர். மேலும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு எல்லை தாண்டும் பயணிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
மேற்கொண்டு வைரஸ் பாதிப்பு பரவாத வகையில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் யாருக்கும் நிபா வைரஸ் கண்டறியப்படவில்லை என கேரள சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பஞ்சாயத்து பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடைகள் இரவு 8 மணி வரையும், வங்கிகள் மதியம் 2 மணி வரையும் இயங்கலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மற்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில் கட்டுபாடுகள் உள்ள ஊராட்சி பகுதிகளில் தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முக கவசம் மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி மக்கள் தஙகள் கைகளை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. நிபா வைரஸ் தொடர்பாக தற்போது பாதிப்புகள் இல்லாததால் மாநிலம் பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியதாவது, "நிபா வைரஸ் தொடர்பாக 61 நபர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த முடிவுகள் வெளியானதில் 61 நபருக்கும் நிபா வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும், பாதிப்புக்குள்ளானவர்களை பராமரித்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எதிர்மறையான முடிவுகள் கிடைத்து உள்ளன.
மற்ற மாவட்டங்களிலும் கண்காணிப்பில் உள்ளவர்களின் முடிவுகள் எதிர்மறையாகும் என நம்புகிறோம். நிபா பாதித்த பகுதிகளில் மத்திய குழு நேற்று (செப். 18) ஆய்வு நடத்தினர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சீனாவால் தமிழகத்திற்கு வரும் சிக்கல்.. இலங்கை உதவுகிறதா? - ராமதாஸ் கண்டனம்!