டெல்லி :சண்டிகர் மற்றும் தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டி வருவதால் காணும் இடம் எல்லாம் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. சண்டிகரில் கடந்த 24 மணி நேரத்தில் 322 புள்ளி 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்கு பிறகு சண்டிகரில் வரலாறு காணாத மழைப் பொழிவு பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சண்டிகரில் 262 மில்லி மீட்டர் அளவில் மழை கொட்டியதே இதற்கு முன் கொட்டித் தீர்த்த அதிகபட்ச மழை அளவு என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏறத்தாழ 30 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதேபோல் அரியானாவிலும் கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது. வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டு தத்தளிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.
தலைநகர் டெல்லியில் இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் முக்கியச் சாலைகள் மற்றும் குடியிருப்புகள் நீரில் மூழ்கின. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 153 மில்லி மீட்டர் அளவில் மழை கொட்டித் தீர்த்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1982 ஆம் ஜூலை மாதத்திற்கு பின் பதிவான அதிகபட்ச கனமழை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு டெல்லியில் அதிதீவிர மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ள வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து உள்ளது. நரேலா, அலிபூர், ரோகினி, பட்லி, பிடம்புரா, பஸ்சிம் விஹார், பஞ்சாபி பாக், காஷ்மீரி கேட், சீலம்பூர், ரஜோரி கார்டன், செங்கோட்டை, ராஜீவ் சவுக் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ் தளத்தை மழை நீர் சூழ்ந்து கொண்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். காலை முதலே கனமழை கொட்டி வருவதால் மக்களின் அன்றாட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. தாழ்வான இடங்களில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க :லடாக்கில் கடும் பனிப்பொழிவு - போக்குவரத்து பாதிப்பு