டெல்லி: தற்போதைய டிஜிட்டல் உலகம் நம்மை எளிதில் ஒன்றிணைக்கிறது. நாம் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் நம் அன்புக்குரியவர்களை தொடர்பு கொள்ளலாம்- அவர்களுடன் உடனடியாக பேசவும், பார்க்கவும் இந்த தொழில்நுட்பங்கள் நமக்கு உதவுகின்றன.
இவை நாம் தொடர்பு கொள்வதற்கான வழிகளை எளிமையாக்கிய அதே வேளையில், நம் அன்புக்குரியவர்களுடனான பிணைப்பை உடைத்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். எப்போது வேண்டுமானாலும் எளிதில் பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மூழ்கிய நாம், பல நண்பர்களையும், உறவுகளையும் மறந்துவிட்டோம் என்பதுதான் உண்மை.
தற்போதைய சூழலில் நம் உறவுகளை பேணிக் காப்பதுதான் முக்கியமான விஷயம். அவ்வாறு நாம் நம்முடைய பழைய நண்பர்களையோ, உறவுகளையோ மீண்டும் புதுப்பிப்பது எப்படி? அவர்களிடம் மீண்டும் சாதாரணமான அந்த உரையாடலை தொடங்குவது எப்படி? இதுபோன்ற கேள்விகள் எழும். எந்தவித சிரமங்களும் இல்லாமல், நமது பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பது எப்படி? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்...
முதலடியை நீங்கள் எடுத்து வையுங்கள்:நீங்கள் ஒரு பழைய தோழனை சந்திக்க விரும்பினால், தயங்காமல் முதலில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்புங்கள். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக ஊடகங்கள் வாயிலாக வேண்டுமானாலும் குறுஞ்செய்தியை அனுப்புங்கள். இந்த குறுஞ்செய்தி உங்களைப் பற்றி அவர் நினைவு கூற உதவும்.
அதேநேரம் அவர்களது விருப்பம் இன்றி, உடனடியாக சந்திக்கும்படி அழுத்தம் கொடுக்கக்கூடாது. அவர்களும் உங்களுடன் பேச விரும்பி, குறுஞ்செய்தி அனுப்பும்போது உரையாடலை தொடங்குங்கள். இந்த சிறிய உரையாடல் உங்களது பழைய தோழன் உங்களுக்கு மீண்டும் கிடைக்க உதவக்கூடும்.
சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்:நீங்கள் உங்களது நண்பருடன் பழையபடி பேச ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால், அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யலாம். கஃபே, பூங்கா, புத்தக நிலையம் உள்ளிட்ட அமைதியான இடத்தில் சந்திக்கலாம். இந்த சந்திப்பின்போது, உங்களது புதிய நண்பர்களை அழைத்துச் செல்வதை தவிர்க்கலாம்.
தற்போதைய நண்பர்கள், பழைய நண்பர்களுக்கு அசெளகரியமான உணர்வை தரலாம். நீண்ட நாள் கழித்து சந்திப்பதால், சிலருக்கு பயம், பதற்றம் கூட இருக்கலாம். அவ்வாறு இருந்தால், பவுலிங் போன்ற ஏதேனும் ஆக்டிவான விளையாட்டில் ஈடுபடலாம்.
வெளிப்படையான, பொறுமையான உரையாடல்கள்:கடந்த காலத்தில் உங்களுக்குள் ஒரு வலிமையான பிணைப்பு இருந்திருக்கலாம், உங்களது உறவு வலிமையானதாக இருந்திருக்கலாம். ஆனால், பல ஆண்டுகள் கழித்த இந்த சந்திப்பில் நீங்கள் அதை எதிர்பார்க்க முடியாது. உங்களது உறவில் இயல்பாக விரிசல் விழுவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்.
இருவருக்கும் காரணங்கள் இருக்கலாம். அசெளகரியமான உணர வைக்கும் பழைய காரணங்களைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு, சாதாரணமான பொதுவான சில உரையாடல்களை தொடங்கலாம். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் தங்களது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைத்திருக்கிறார்கள்.
அதனால், எளிமையான உரையாடல்களை தொடங்க உங்களது சமூக வலைதள கணக்குகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் மீண்டும் இயல்பாக பேசிக் கொள்ள அது உதவும். சிரிக்க வைக்கும் வேடிக்கையான விஷயங்களை பேசலாம். உங்களது நண்பரின் வேலை, சொந்த வாழ்க்கை, விருப்பம் உள்ளிட்டவை குறித்து கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் இருவரும் மீண்டும் உங்களது உறவை வலிமையாக்குவதற்கு இது உதவும்.
பழைய நினைவுகளை பகிரலாம்:நீங்கள் ஒருவருக்கொருவர் இயல்பாகவும், நெருக்கமாகவும் உணர்ந்த பிறகு, பழைய நினைவுகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம். அப்போது என்ன தவறு? யார் மீது தவறு? போன்ற உரையாடல்களும் வரலாம். ஒருவேளை யார் தவறு செய்தார்கள் என்பது குறித்து உங்களது நண்பர் அதிகமாக பேசினால், அதனை கவனமாகவும் மன முதிர்ச்சியுடனும் கையாள வேண்டும் .
உங்களது கடைசி சந்திப்புக்குப் பிறகு இருவரது வாழ்விலும் ஏற்பட்ட பெரிய மாற்றங்களை பகிர்ந்து கொள்ளலாம், இது இருவருக்கும் இடையிலான புரிதலை அதிகரிக்கும். இந்த மாற்றங்கள் குறித்த உரையாடல்கள், உங்கள் பழைய நண்பர் மீண்டும் உங்களுடன் பயணிக்க தயாராக இருக்கிறாரா? இல்லையா? என்பதை புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: எட்டு வைத்து நடத்தால் எட்டிப்போகும் கேன்சர்... ஆய்வில் புதிய தகவல்..