டெல்லி:ராஜஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சச்சின் பைலட்டை முன்னிறுத்தியே, அந்த தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்ட நிலையில் தனக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என அவர் எண்ணினார். ஆனால், மூத்த தலைவர் சச்சின் பைலட் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது முதலே, அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
2020ம் ஆண்டு துணை முதலமைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து பைலட் அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் பைலட் மற்றும் கெலாட் இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியது. முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதாவது ஒரு வழியில் குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தார். முந்தைய பாஜக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக, மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என அண்மையில் எச்சரித்தார்.
கர்நாடகா ஃபார்முலா: இது ஒருபுறம் இருக்க, கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ், அதே பாணியை தேர்தலை எதிர்நோக்கியுள்ள ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தொடரவும் முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா - டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி இருந்தது. இருவரையும் டெல்லிக்கு அழைத்த மேலிடம், சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. அதற்கு பிரதிபலனாக இருவருக்கும் இடையேயான பிரச்னை முடித்து வைக்கப்பட்டு, சித்தராமையா முதல்வராகவும், சிவகுமார் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர்.