புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி தேசிய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
இந்நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை தொடர எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டங்களால், சந்தைகள் பலவீனப்படுத்தப்பட்டு கார்ப்பரேட்களின் கை ஓங்கும் என விவசாயிகள் அச்சம் கொள்கின்றனர்.
எனவே, விவசாயிகள் எழுப்பும் இதுமாதிரியான ஏழு விவகாரங்களில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 13 விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு வரைவு திட்டத்தை அனுப்பியுள்ளது.
அதில், வேளாண் சட்டங்களை திரும்பபெறுவது குறித்து மத்திய அரசு எந்த உறுதியும் அளிக்கவில்லை.
முன்னதாக, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது, “விவசாயிகள் எழுப்பும் குறைகளுக்கு தீர்வு காணும் வகையிலான வரைவு திட்டம் வகுக்கப்பட்டு அவர்களுக்கு அனுப்பப்படும்” என அமித் ஷா தெரிவித்திருந்தார்.
ஆனால், வேளாண் சட்டங்களை நீக்குவதில் விவசாயிகள் உறுதியாக இருந்ததால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.