மும்பை:2023-24ஆம் நிதியாண்டிற்கான மூன்றாவது இருமாத நாணயக் கொள்கை கூட்டம், ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கூட்டம் இன்று(ஆகஸ்ட் 10) முடிவடைந்தது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும். மத்திய நிதிக் கொள்கைக் குழு (MPC - Monetary Policy Committee) ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த அறிவிப்பு உள்ளது.
நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறி, உலக வளர்ச்சிக்கு 15 சதவீதம் அளவுக்கு பங்களிக்கிறது. நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் அதேநேரம் பணவீக்கம் படிப்படியாக சீரமைக்கப்படுவதை உறுதி செய்யவும் மத்திய நிதிக் கொள்கைக் குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. மொத்த பணவீக்கத்தின் இலக்கான 4 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலம், தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் குறைந்துள்ளது. உள்நாட்டு தேவை நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளது.
தக்காளி விலை உயர்வு மற்றும் தானியங்கள், பருப்பு வகைகளின் விலை உயர்வு சில்லறை பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக உள்ளன. இனி வரும் காலங்களில் காய்கறிகள் விலை கணிசமான குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல்-மே மாதங்களில் நிகர அந்நிய நேரடி முதலீடுகள் 5.5 பில்லியன் டாலர்களாக குறைந்து உள்ளது. இது கடந்த ஆண்டு 10.6 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்திய ரூபாய் மதிப்பு நிலையானதாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 600 பில்லியன் டாலர்களாக உள்ளது.
2023-24ஆம் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்து உள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 6.5 சதவீதமாகவும் இருக்கும். மூன்றாம் காலாண்டில் 6 சதவீதமாகவும், 4ஆம் காலாண்டில் 5.7 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மணிப்பூர் விவகாரத்தைத் தூண்டிவிடாதீர்கள்.. அரசியலாக்கத் துடிக்கும் எதிர்க்கட்சிகள்.. அமித் ஷா குற்றச்சாட்டு!