மும்பை: நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தங்க நகைக் கடன்களைத் திருப்பி செலுத்துவதற்கான பல திட்டங்கள் உள்ளது. அதில் ஒரு திட்டமாக புல்லட் முறையில் தங்க நகைக் கடனை திருப்பி செலுத்த முடியும். புல்லட் முறையில் தங்கக் கடன்களைத் திருப்பி செலுத்துபவர்களுக்குக் கடன் வரம்பு ரூ.2 லட்சமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது புல்லட் முறையில் கடன்களைத் திருப்பி செலுத்துபவர்களுக்கான கடன் வரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.
31 மார்ச் 2023ன் நிலவரத்தின் படி முன்னுரிமைத் துறைக் கடனின் (PSL) கீழ் ஒட்டுமொத்த இலக்கு மற்றும் துணை இலக்குகளை எட்டிய நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை (UCB) பொருத்தமட்டில், புல்லட் முறையில் நகைக்கடனைத் திருப்பி செலுத்தும் திட்டத்தின் கீழ் தங்கக் கடனுக்கான தற்போதைய வரம்பான ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
புல்லட் முறை திரும்ப செலுத்தும் முறை என்றால் என்ன?
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் தங்கக் கடன்கள் பெறுபவர்கள் புல்லட் முறையில் கடனை திருப்பி செலுத்தும் போது கடன் காலத்தில் முடிவில் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்தலாம் என்பதாகும்.
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்பில் தங்க நகைக் கடன் வழங்கும் போது இந்த புல்லட் முறையில் கடனை திருப்பி செலுத்தும் முறைக்கு ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்க வேண்டும் என ரிசர்வ வங்கி ஆளுநர் தாஸ் கூறியுள்ளார். மேலும், புல்லட் முறையில் கடன்களைத் திருப்பி செலுத்தும் திட்டத்தில் தங்க நகைக்கடன் தொகையை உயர்த்துவது குறித்து விரிவான ஒழுங்குமுறை கட்டமைப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டம் குறித்து ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்தவும். தற்போது, செயல்படுத்தும் திட்டங்களுக்கான விதிமுறைகளை மதிப்பாய்வு செய்யப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். மேலும், விரிவான வரைவு வழிகாட்டுதல்கள் பொதுமக்களின் கருத்துகளுக்கான வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறினார்.
வங்கி கார்டுகளில் உள்ள தரவுகளைப் பாதுகாப்பதற்கான (Card-on-File Tokenisation) கார்டு-ஆன்-பைல் டோக்கனைசேஷன் முறையை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி ஆலோசனை செய்து வருகிறது. இதன் மூலம் இ-காமர்ஸ் பரிவர்த்தனை செய்ய உதவும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு ரூ.17,742 பிடித்தம்.. வாடிக்கையாளருக்கு ரூ.24ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணை!