மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 8 மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த 12 நாள்களாகத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.
கடந்த நவம்பர் 26ஆம் தேதியன்று போராட்டம் தொடங்கியபோது, விவசாய போராட்டக் குழுக்களைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் காவல் துறையினர் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகள் விரட்ட முயன்று அது முடியாமல்போக காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
எனினும், டெல்லிக்குச் செல்வதில் விவசாயிகள் உறுதியாக இருந்த நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்குக் காவல் துறை அனுமதி அளித்தது. விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி விருதுப் பெற்ற சிர்மோர் ஷைர் டாக்டர் மோகன்ஜித், பிரபல சிந்தனையாளர் டாக்டர் ஜஸ்விந்தர் சிங், நாடக ஆசிரியர் திரிபூன் ஸ்வராஜ்பீர் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது தேசிய விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “ தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளால் பலவீனமாகியுள்ள காங்கிரஸ் கட்சி தனது அரசியல் இருப்பைக் காப்பாற்ற அரசுக்கு எதிராக போராட்டங்களை பின்னின்றுத் தூண்டிவிடுகிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான யூபிஏ-யில் முதல் ஆட்சிக் காலத்தின்போது எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களை ஆதரித்தன. இப்போது அவர்கள் தான் விவசாயிகளை குழப்ப முயற்சிக்கிறார்கள்.
அந்த புதிய சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதே வேளையில், எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தையில் நுழைந்து, போராட்டக்காரர்களைத் தூண்ட முயற்சிக்கின்றன.
அப்போதைய மத்திய வேளாண்மை மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சரும், என்.சி.பி தலைவருமான சரத் பவார், விவசாய உற்பத்தி (ஒழுங்குமுறை) சந்தைப்படுத்தல் (ஏ.பி.எம்.ஆர்) சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக அனைத்து மாநில/ யூனியன் பிரதேச முதலமைச்சர்களுக்கு கடிதங்களை எழுதினார். 2005ஆம் ஆண்டில் பவாரின் இந்த முன்மொழிவுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம், சிபிஐ மற்றும் சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தன. விவசாய உற்பத்தி (ஒழுங்குமுறை) சந்தைப்படுத்தல் (ஏ.பி.எம்.ஆர்) சட்டத்தை ரத்து செய்வதாக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் 2019 ஆம் ஆண்டில் அறிவித்தது.
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பிரபலங்கள் தேசிய விருதுகளைஅங்கீகாரங்களாக ஏற்றுக்கொள்வதும் அல்லது திருப்பித் தருவதும் அவர்களின் உரிமை. இருப்பினும், சிலர் அதை புகழ் வெளிச்சத்திற்காக செய்வதால் எதுவும் செய்ய முடியாது” என கூறினார்.
இதையும் படிங்க :ஆளில்லா விமானங்களை ஆய்வு செய்யவுள்ள இளம் காவலர்கள்