போபால்: மத்தியப்பிரதேசத்தின் உப்பர் ஏரியின் கரையில் அமைந்துள்ள வான் விஹார் தேசிய மற்றும் வனவிலங்கு பூங்காவில் சில மர்ம நபர்கள் புலிகளின் மீது கற்களை வீசுவதாகக்கூறி, கேஜிஎஃப் படத்தில் இரண்டாம் பாகத்தில் நடித்த பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வான் விஹார் பூங்காவில், கூண்டுகளில் உள்ள புலிகள் மீது சுற்றுலாப் பயணிகள் கற்களை வீசுகின்றனர். அப்படிச் செய்யாதே என்று சொன்னால், நன்றாகச் சிரிப்பது, கூச்சலிடுவது, கூண்டை அசைப்பது மற்றும் மேலும் கற்களை வீசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். புலிகளுக்கு பாதுகாப்பு இல்லை” எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பூங்கா நிர்வாகம், சம்பவம் குறித்து ஏற்கனவே விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.மேலும், ”வான் விஹார் தேசிய பூங்காவில், விலங்குகளுக்கு உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலுக்கும் எதிராக ஜீரோ டாலரன்ஸ் கொள்கையை பின்பற்றுகிறது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.