டெல்லி:நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என பல மொழிப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக விளங்கி வருகிறார். இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோ மிகவும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துகிறார்கள் எனவும் ராஷ்மிகா அவரது X தளத்தில் பகிர்ந்து வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ராஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மேலும், இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தனர். ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோவை தொடர்ந்து சச்சின் டெண்டுகரின் மகள், நடிகை கத்ரினா கைஃப் ஆகியோரின் புகைப்படங்களும் டீப்ஃபேக் செய்யப்பட்டு சமூக வலைத்தளத்தில் பரவியது.
இதனிடையே, தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.