கொல்கத்தா:மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில், பீகார் மாநிலத்துக்குச் சென்றார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பீகாரில் ராம நவமியன்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் எனக் கூறினார். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா தனது டிவிட்டர் பதிவில், "பீகாரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா மிரட்டியிருக்கிறார்.
குஜராத்தில் கொலையாளிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதை உறுதி செய்த அமித் ஷா, அவர்களுக்கு லட்டு ஊட்டிவிடுகிறார். குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேர் விடுவிக்கப்பட்டனர்" என விமர்சித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறும்போது, "ஹவுரா அருகே உள்ள ஷிவ்பூரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தின் பின்னணியில் அமித் ஷா உள்ளார்" எனக் குற்றம்சாட்டினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சனிக்கிழமை பீகார் மாநிலம் நவாடா பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "ராம நவமியின்போது பீகாரின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பங்களைத் தடுக்க, நிதிஷ் குமார் தலைமையிலான அரசு தவறிவிட்டது. இங்கு 2025ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால், வன்முறையில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்படுவார்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, மாநிலம் முழுவதும் பயங்கரவாதத்தைப் பரப்புகிறது. மகாகத்பந்தன் கூட்டணி வேரோடு அறுக்கப்பட்டதால் தான் பீகாரில் அமைதி திரும்பும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: திருமண பரிசாக வந்த எமன்.. ஹோம் தியேட்டர் வெடித்து புதுமாப்பிள்ளை பலி..