2003ஆம் ஆண்டு, ஆங்கிலக் கவியுலகின் அடையாளமாக போற்றப்படும் வில்லியம் பிளேக்கின் பிறந்த நாளில் நிறுவப்பட்டது சர்வதேச வட்டயம் அமைப்பு. கடந்த 17 ஆண்டுகளாக சிறந்த படைப்புகளினால் இலக்கியத் துறைக்கு பங்களிப்பு வழங்கிய பன்மொழி எழுத்தாளர்களின் சேவையை பாராட்டும் வகையில் நவம்பர் 21ஆம் தேதி அன்று சர்வதேச வட்டயன் விருது வழங்கி வருகிறது.
அந்த வகையில், இலக்கியத்திற்கான சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிற்கு இந்தாண்டிற்கான விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் மிகத் தீவிரமாக செயலாற்றிவரும் மத்திய அமைச்சர் நிஷாங்க், இதுவரை 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்ட 75க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
கவிதைத் தொகுப்பு, புனைகதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என அவரது இலக்கிய உலக பங்களிப்பை இந்தியாவின் புகழ்பெற்ற படைப்பாளிகள் கொண்டாடியுள்ளனர். இந்த விருது குறித்து நம்மிடையே பேசிய மத்திய அமைச்சர் நிஷாங்க், "இந்தி மொழியை உலகமயமாக்குவதற்கு இதுபோன்ற விருதுகள் மிகவும் அவசியம். இதுபோன்ற விருதுகளை இந்தி மொழிக்கும், நாட்டிற்கும் அர்ப்பணிக்கிறேன். இலக்கியத் துறையில் தன்னலமின்றி செயல்படும் அமைப்புகள் பாராட்டப்பட வேண்டியவை" என தெரிவித்தார்.
பிரபல கவிஞர் மனோஜ் முண்டாஷீருக்கும் இந்தாண்டுக்கான சர்வதேச வட்டயன் இலக்கிய விருது வழங்கப்படும் என விருது குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். வட்டயன் சர்வதேச விருது வழங்கும் நிகழ்வுகள் பெரும்பாலும் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் அல்லது லண்டனில் அமைந்துள்ள நேரு மையத்தில் வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக இணையவழி நிகழ்வாக நடைபெறும் என தெரிகிறது.