வாரணாசி : உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா வரும் உள்நாடு முதல் வெளிநாட்டு பக்தர்களுக்கு மிகவும் பரீட்சயமான வங்கி ராம் ராம்பாதி வங்கி. இந்த வங்கியில் எந்த ஆவணங்களும் இன்றி ராமரின் பெயரில் பொது மக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.
அதேநேரம், பணத்திற்கு பதிலாக கட்டுக் கட்டாக வெள்ளைத் தாள்களும், சிவப்பு நிற மையும் கடனாக வழங்கப்படுகின்றன. காண்போரை குழப்பத்திற்கு உள்ளாக்கும் வகையில் இந்த வங்கியின் நடவடிக்கைகள் இருப்பது போல் எண்ணிலால் உண்மை தான். இது ஒரு ஆன்மீக வங்கி என கூறப்படுகிறது.
மற்ற சாதாரண வங்கிகளை போல், இந்த ராம் ராம்பாதி வங்கியிலும் மேலாளர், கணக்காளர், ரகசிய லாக்கர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உண்டு. ஆனால் இங்கு பணத்திற்கு பதிலாக பக்தர்களின் வேண்டுதல்கள் சேமிக்கப்படுகின்றன. இந்த வங்கியில் கணக்கு வைக்க விரும்பும் நபர் வழக்கமான வங்கிகளை போல் நேரடியாக வங்கிக்கு சென்று ஊழியர்களை சந்தித்து கணக்கு தொடங்க முடியும்.
கடன் பெற விரும்புவோர்களுக்கு ராமரின் பெயரில் கடன் வழங்கப்படுகின்றன. பணத்திற்கு பதிலாக வெள்ளை காகிதங்களும் சிவப்பு நிற மையும் வழங்கப்படுகின்றன. இந்த காகிதங்களில் வங்கியில் இருந்து வழங்கப்படும் சிவப்பு நிற மையை கொண்டு ராமரின் பெயரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் முறை எழுத வேண்டும்.
சாதாரண வங்கிகளில் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டியது போல் இந்த வங்கியில் கடன் வாங்வ்கிய 8 மாதம் 10 நாட்களில் அந்த காகிதங்களை திருப்பிச் செலுத்த வேண்டும். அப்படி கொடுக்கப்படும் வாடிக்கையாளர்களின் காகிதங்கள் பாதுகாக்கப்படும். முற்றிலும் வித்தியாசமான நடைமுறைகளை கொண்டு இயங்கும் இந்த வங்கியில் கோடிக்கணக்கான மக்கள் கணக்கு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.