அயோத்தி: வருகிற 22ஆம் தேதி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். அது மட்டுமல்லாமல், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், குருக்கள் என 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல், உலகம் முழுவதிலும் இருந்து 100 பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் வைக்கப்பட உள்ள பிரமாண்டமான ராமர் சிலை, இன்று காலை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்துடன் கிரேன் மூலம் நிறுவப்பட்டது. அப்போது, ராமர் கோயில் கட்டுமான கமிட்டியின் தலைவர் நிரிபேந்திரா மிஷ்ரா உடன் இருந்தார். இந்த சிலையானது, கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்த ஒன்று.
முன்னதாக, ஜனவரி 22ஆம் தேதியான ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரை, 7 நாட்களுக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், 22ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில், குறைந்தபட்சம் 121 ஆச்சாரியார்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அன்றைய தினம் மதியம் 12.20 மணியளவில் கும்பாபிஷேகம் தொடங்கி, 1 மணிக்கு முடிவடையும் எனவும் கூறப்படுகிறது. அதேநேரம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பல்வேறு பயங்கரவாத மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து, அயோத்தி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயிலைச் சுற்றி 4.5 கிலோமீட்டர் தூரம் வரை கண்காணிக்க முடியும். உத்தரப் பிரதேசம் - நேபாளம் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும், உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்பு படையினர், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மாநில போலீசார் நவீன ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இதில், 100 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 325 காவல் ஆய்வாளர்கள், 800 துணை காவல் ஆய்வாளர்கள் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் அயோத்தியில் பாதுகாப்பை பலப்படுத்த பயன்படுத்தப்பட்டு உள்ளனர். முன்னதாக, நாளை மறுநாள் திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அயோத்தி ராமர் கோயில்; ஹைதராபாத்தில் தயாரான 1,265 கிலோ எடையுள்ள பிரமாண்ட லட்டு!