உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளனர்.
தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் அறிவித்துவரும் நிலையில், தேர்தல் பரப்புரை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், முன்னணி வேளாண் சங்க தலைவரும், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் முக்கியத்துவம் பெற்ற பிரமுகரான ராகேஷ் திகாயத் வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
மத்திய பாஜக அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்தபோது, தலைநகர் டெல்லியில் பெரும் போராட்டத்தை நடத்திய ராகேஷ் திகாயத், இச்சட்டங்களை அரசு திரும்பப்பெற முக்கிய காரணமாக இருந்தார்.
தற்போது அவர், தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு எதிராக தீவிர பரப்புரையை மேற்கொண்டுவருகிறார். அம்மாநிலத்தின் பிஜ்னோர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் வலிமை மிக்கவராக இருக்க வேண்டும். இந்த வேலைக்கு யோகி ஆதித்யநாத்தை விட பொருத்தமானவர் யாரும் இல்லை. எனவே, யோகியை எதிர்க்கட்சித் தலைவராக பார்க்க விரும்புகிறேன் என கிண்டலாகக் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கும் கடும் போட்டி நிலவிவருவதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆகியோரும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:HOROSCOPE: ஜனவரி 27 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?