டெல்லி: யூனியன் பிரதேசமான டெல்லி அரசில் குரூப்-ஏ அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றத்துக்கு ஆணையம் அமைக்க மத்திய அரசு கடந்த மே மாதம் அவசர சட்டம் கொண்டு வந்தது. காவல் துறை, பொது அறிவிப்பு, நில அதிகாரம் ஆகியவை தவிர, பிற துறைகளின் அதிகாரம் டெல்லி அரசுக்கே உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம் டெல்லி அரசு அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்ற முடிவு எடுக்கும் அதிகாரம், டெல்லி துணைநிலை ஆளுநருக்கே மீண்டும் வழங்கப்பட்டது. அவசர சட்டத்துக்கு மாற்றான டெல்லி நிர்வாக திருத்த மசோதா எதிர்க் கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனிடையே இந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா நேற்று தாக்கல் செய்தாா்.
இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி, "அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது" எனச் சாடினார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், "இந்த சட்டம் முழுமையாக அரசியலமைப்புக்கு எதிரானது என சட்ட அமைச்சகம் மற்றும் அதனை இயற்றும் அரசுக்கு நன்றாக தெரியும்" என்றார்.