டெல்லி:திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாநிலங்களவை பொதுச்செயலாளருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில்,"மாநிலங்களவை நடைமுறை நடத்தை விதி 267இன் படி, மார்ச் 29 (அதாவது இன்று) வணிக நேரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சபை நடவடிக்கைகளை நிறுத்திவைத்து, ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்த திருச்சி சிவா
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வு குறித்து விவாதிக்க திமுக எம்.பி. திருச்சி சிவா மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில், பெட்ரோல், டீசல் விலை ஆறு முறை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் 100.21 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 91.47 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வணிகத் தலைநகர் என்றழைக்கப்படும் மும்பையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 115.05 ரூபாய்க்கும், டீசல் 99.25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக, பெட்ரோல், டீசல், விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.