டெல்லி:சிறுவர் நீதி (குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு) சட்டத்திருத்த மசோதா 2021, எதிர் கட்சிகளின் அமளிகளுக்கிடையில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அம்மசோதா குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிதி இராணி மாநிலங்கள் அவையில் பேசியதாவது:
'இந்த சட்டத்திருத்த மசோதா, நாட்டில் பாதிக்கப்படக்கூடியவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. சிறுவர் நீதி மசோதா குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் என கருதப்பட்டது. பின்னர் அதில் சிக்கல்கள் எழுந்தன. குழந்தையைத் தத்தெடுக்கும் போது அதற்கான ஆவணப் பணிகள் முடிவடைய நீண்ட நாட்கள் எடுக்கின்றன; அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலம் குழந்தைகள் நலக் குழு, மாவட்ட நீதிபதிக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
மக்கள் குழந்தைகள் நலக் குழுவில் உறுப்பினர்களாக இருக்க விரும்புகிறார்கள். இந்த நேரத்தில் உறுப்பினர்கள் தகுதிக்கான அளவுகோல்களை நாங்கள் நிர்ணயம் செய்துள்ளோம். தனிநபர் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டவர், தார்மீக அடிப்படையில் குற்றச்செயல்களுக்காக தண்டனை பெற்றவர், குழந்தைகள் நலனைச் சுரண்டுபவர்கள், குழந்தைகளைப் பணியில் அமர்த்தியிருப்பவர்கள் போன்றவர்கள் குழந்தைகள் நலக் குழுவில் உறுபினராக இருக்க முடியாது என்ற அமைச்சர், பெற்றோருக்கிடையில் மோதல் உருவான பின்னர் அவர்களின் குழந்தையை, குழந்தைகள் நலக்குழு தத்தெடுத்துக் கொண்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கையும் சுட்டிக்காட்டி பேசினார். தொடர்ந்து இம்மசோதா மூலம், மாவட்ட நீதிபதி, சிறுவர் நீதி வாரியம், குழந்தைகள் நலக் குழு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றார்.