டெல்லி :எதிர்க்கட்சிகள் தொடர் அமளியை தொடர்ந்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் அது முதலே மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
மணிப்பூர் கலவரம் குறித்தும் குக்கி இனத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல், மணிப்பூர் விவகாரம் குறித்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார். இருப்பினும் அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை (ஆகஸ்ட். 8) முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட். 7) வழக்கம் போல் மாநிலங்களவை கூட்டம் தொடங்கியது.