டெல்லி:இன்று உலக வரைபடத்தில் தனிநாடாக அறியப்படும் வங்கதேசம் முன்னாளில் கிழக்கு பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் ராணுவத்தினரால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு, இனப் படுகொலைகளுக்கும் ஆளானது வங்கதேசம்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அரசு 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராகப் போரிட்டது. இதற்கு வங்க தேசமும் ஆதரவு அளித்தது. 13 நாள்கள் நடைபெற்ற இந்தப் போரில் இந்தியா வெற்றிபெற்றது. மேலும், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி, தனது 93 ஆயிரம் துருப்புகளுடன் இந்தியாவிடம் சரணடைந்தார்.
இந்திய பாகிஸ்தானிற்கு எதிரான போரில் வெற்றிகண்டு வங்க தேசம் சுதந்திர நாடாக உதயமான தினம் இன்று. இதனைக் கௌரவிக்கும் வகையில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16ஆம் தேதி விஜய் திவாஸ் அல்லது வெற்றி தினமாக கொண்டாடிவருகிறது.
அந்த வகையில் இன்று கொண்டாடப்படும் வெற்றி தினத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.