லக்னோ (உத்தர பிரதேசம்):தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் (Jailer) படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்னதான நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்குப் பயணம் சென்றார். கரோனாவிற்கு முன்னதாக அவரது ஒவ்வொரு படம் வெளியாவதற்கு முன்பும் அவர் இமயமலை செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்து விட்டு தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அடுத்ததாக ஜார்கண்ட் சென்றார். இதனையடுத்து ரஜினிகாந்த் இல்லாமலேயே ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவும் நடைபெற்றது.
ஜார்கண்ட்டின் சின்னமாஸ்தா கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த், யசோதா ஆசிரமத்தில் ஒரு மணிநேரம் தியானம் செய்தார். இதைத் தொடர்ந்து ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து ரஜினிகாந்த் உத்தர பிரதேசம் செல்ல உள்ளதாகவும், அங்கு யோகி ஆதித்யநாத் உடன் சேர்ந்து ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் சிறப்பு திரையிடலுக்காக நடிகர் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை லக்னோ சென்றார். பின்னர் அவர் உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் ஜெயிலர் படத்தைப் பார்த்தார். பின்னர் அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவா நடித்த "ஜெயிலர்" திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டார். காவல்துறை அதிகாரிகளின் எளிமையான வாழ்க்கையை இது சித்தரிக்கிறது. இந்தப் படத்தில் சிறப்பாகப் பணியாற்றிய நடிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் வாழ்த்துக்களும்.” என பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா உடன் உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். ரஜினிகாந்த்தை வரவேற்பதற்காக யோகி ஆதித்யநாத் வாசலில் நின்றிருந்தார். அவரை கண்டதும் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து வணங்கினார்.