லக்னோ (உத்தரப்பிரதேசம்): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த், இன்று (ஆகஸ்ட் 19) உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அவரது லக்னோ இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது, ரஜினிகாந்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாசலில் வந்து வரவேற்றார்.
அந்த நேரத்தில், ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதனைத் தொடர்ந்து, வீட்டுக்குள் சென்ற ரஜினிகாந்த், முதலமைச்சருக்கு நினைவுப் பரிசை வழங்கினார். பின்னர், ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் இணைந்து முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மேலும், இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த பதிவில், “இன்று லக்னோவில் உள்ள எனது அதிகாரப்பூர்வ வீட்டில் பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் உடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு” என குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக, நேற்று (ஆகஸ்ட் 18) இரவு லக்னோ வந்தடைந்த ரஜினிகாந்த், அம்மாநில துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மெளரியா உடன் சேர்ந்து ஜெயிலர் படத்தைப் பார்த்தார். அப்போது, ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார். அப்போது ஜெயிலர் படத்தின் வெற்றி குறித்து செய்தியாளரிடம் பேசிய ரஜினிகாந்த், ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது கடவுளின் ஆசிர்வாதம் என தெரிவித்தார்.
அதேநேரம், ஜெயிலர் திரைப்படம் மற்றும் ரஜினிகாந்த் குறித்து பேசிய உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மெளரியா கூறுகையில், “நான் ஜெயிலர் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். நான் ரஜினிகாந்தின் பல திரைப்படங்களைப் பார்த்து உள்ளேன். அவர் ஒரு திறமையான நடிகர். அவரது நடிப்பு இல்லாமல் இந்தப் படம் இல்லை. ரஜினிகாந்த் படத்தின் முக்கியத்துவத்தை உயர்த்தி உள்ளார்” என கூறி இருந்தார்.
முன்னதாக, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்த ரஜினிகாந்த், அம்மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சின்னமஸ்தா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, ராஞ்சியில் உள்ள யகோதா ஆசிரமத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தியானத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அம்மாநில ஆளுநர் மாளிகையில் வைத்து ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை ரஜினிகாந்த் நேரில் சந்தித்தார்.
கடந்த ஆகஸ்ட் 10 அன்று ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, விநாயகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் ‘காவாலா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்க, ‘ஹுகும்’ பாடல் ஸ்பாட்டிஃபை தளத்தில் புதிய சாதனையைப் படைத்து உள்ளது. அது மட்டுமல்லாமல், நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படம் ஆகஸ்ட் 17 வரை 235.65 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரஜினி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் - இந்திய அளவில் ஸ்பாட்டிஃபை செயலியில் முதலிடம் பிடித்த ரஜினி பாடல்!