விஜயவாடா (ஆந்திரா): ஆந்திர அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 371 கோடி ரூபாய் வரை ஊழல் புரிந்ததாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை ஆந்திர சிஐடி காவல் துறையினர் கடந்த செப்டம்பர் 9 அன்று கைது செய்தனர். இதனையடுத்து அவர் ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் என்பவருக்கு தொலைபேசி வாயிலாக தனது ஆதரவை தெரிவித்து உள்ளார். அப்போது, லோகேஷிடம் தொலைபேசி வாயிலாக பேசிய ரஜினிகாந்த், “எனது நண்பர் சந்திரபாபு நாயுடு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் சிறந்த போராளி.
இந்த பொய் வழக்குகளும், சட்டவிரோத கைதுகளும் அவரை ஒன்றும் செய்யாது. எனவே, நீங்கள் தைரியமாக இருங்கள். எனது அருமை நண்பரான சந்திரபாபு நாயுடு தவறு செய்ய மாட்டார். அவரது நற்செயல்களும், தன்னலம் அற்ற பொது சேவையும் அவரை பத்திரமாக வெளியே கொண்டு வரும்” என நம்பிக்கை அளித்து உள்ளார்.
முன்னதாக, தனது ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாடுக் கழகத்தின் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் 371 கோடி ரூபாய் வரை ஊழல் செய்ததாக ஆந்திர சிஐடி காவல் துறையினரால் நந்தியாலா பகுதியில் வைத்து கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.