ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக கோஷ்டி பூசலால் சிக்கி தவித்துவருகிறது. பிரச்னையை மேலும் சிக்காலாக்கும் வகையில் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதி மத யாத்திரை ஒன்றை தொடங்கவுள்ளார். மாநிலத்தில் உள்ள கிருஷ்ணர் கோயில்கள் வழியே அந்த யாத்திரை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, கோவிந்த் தேவ் மற்றும் காலி அனுமான் கோயிலுக்கு நேற்று சென்று அவர் வழிபாடு மேற்கொண்டார். அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள், 'ராஜஸ்தான் என்றால் வசுந்தரா' என கோஷம் எழுப்பினர். ராஜே தலைமையில் நடைபெறவுள்ள மிகப் பேரிய யாத்திரை இதுவாக இருக்கும் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஆதி பத்ரி கோயிலில் தொடங்கப்படும் யாத்திரை, ஸ்ரீ நாத் உள்பட பல்வேறு கிருஷ்ணர் கோயில்களை தாண்டி செல்லவுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் பேரணியில் 800 முதல் 900 வாகனங்கள் பங்கேற்கவுள்ளன. ஆனால், சமீபத்தில் மாநிலத்திற்கு சென்ற பாஜக பொறுப்பாளர் அருண் சிங், ராஜே இது போன்ற யாத்திரையை திட்டமிடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.