ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அசோக் கெலாட்டின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து, ஊர்க்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜேந்திர குதா பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், ராஜஸ்தானில் பெண்களின் நிலை மற்றும் சட்டம் - ஒழுங்கு குறித்து பேசியதாக ராஜேந்திர குதா அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இதற்கான பரிந்துரையை அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஷ்ராவிடம் நேற்று (ஜூலை 21) வழங்கப்பட்ட நிலையில், உடனடியாக இந்தப் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ராஜேந்திர குதா முன்னதாகவே அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என பாஜக தெரிவித்து வருகிறது. மேலும், நீக்கம் செய்யப்பட்ட குதா, மணிப்பூர் வன்முறைச் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் போராட்டம் நடத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் இணை பொறுப்பாளர் அமிர்தா தவான் கூறுகையில், “ராஜஸ்தான் மாநில அமைச்சரவையில் இருந்து ராஜேந்திர குதா முன்னதாகவே நீக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். முன்னதாக, கடவுளாக போற்றப்படும் ‘சீதா’ குறித்து ராஜேந்திர குதா பேசியதை கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை.